அரசு ஊழியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்தும் பணி பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க வலியுறுத்தியும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நில அளவையர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்…
தமிழகத்தில் தற்போது பெரும்பாலான இடங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சமூக விரோதிகளால் தாக்கப்படுவது தொடர்கதையாகியுள்ளது. இதனை கண்டித்தும் அரசு ஊழியர்களை தமிழக அரசு பாதுகாக்க வலியுறுத்தியும் பல்வேறு தரப்பினரும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நில அளவீடு செய்யும் போது நில அளவை ஊழியர்களை தாக்கிய சமூக விரோதிகளை கண்டித்தும், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்க திருவாரூர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் தேவலோசனா, மாவட்ட இணை செயலாளர் இளையராஜா, கோட்டத் தலைவர் வினோத்குமார், தமிழ்நாடு அரசு வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் விஜய் ஆனந்த் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.














