மயிலாடுதுறை அருகே தொமுச. அரசு பஸ் கண்டக்டர் வெட்டி கொலை- போலீஸ் தீவிர விசாரணை
மயிலாடுதுறை அருகே ஆனதாண்டவபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் மகன் தமிழ்ச்செல்வன்.45. அரசு பஸ் கண்டக்டர். திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் பொறுப்பாளர். தமிழ்ச்செல்வன் வழக்கமாக அதிகாலை 4:30 மணிக்கு தனது ஸ்ப்ளெண்டர் டூவீலரில் பணிக்கு சென்று விட்டு இரவு 10 மணிக்கு வீடு திரும்புவார். நேற்று அதிகாலை வழக்கம்போல் பணிக்குச் சென்ற தமிழ்ச்செல்வன் அன்று முழுவதும் வீட்டிற்கு போன் செய்து பேசவில்லை என கூறப்படுகிறது. நேற்று இரவு வெகு நேரம் ஆகியும் தமிழ்ச்செல்வன் வீடு திரும்பாத நிலையில் நள்ளிரவு ஆனதாண்டவபுரம் ரயில்வே கேட் அருகே ஆற்காடு சாலையில் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் விரைந்து வந்து இறந்த தமிழ்ச்செல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு உள்ளத்துடன், மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இறந்த தமிழ்ச்செல்வனுக்கு மாலதி என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். தமிழ்ச்செல்வன் குடும்பத்தினர் அனைவரும் திமுகவை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது














