கருணாஸின் மகன் கென் கருணாஸ், சிறுவயதிலேயே ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமானார். பின்னர் ‘நெடுஞ்சாலை’ மற்றும் வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ மூலம் அதிக கவனம் பெற்றார். ‘விடுதலை 2’ படத்தில் அவரது தீவிரமான நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
நடிப்போடு மட்டுமல்லாமல் தொழில்நுட்பத்திலும் தன்னை வளர்த்துக்கொள்ள, தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தார் கென். அந்த அனுபவம் தற்போது அவரை இயக்குநர் பாதைக்கு அழைத்து வந்துள்ளது.
தற்போது, ‘காதலன்’ என பெயரிடப்பட்டுள்ள புதிய தமிழ்ப்படம் மூலம் கென் கருணாஸ் இயக்குனராக அறிமுகமாகிறார். பார்வத்தா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்ட்ரீட் பாய் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். பள்ளி வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில், கதாநாயகனாகவும் கென் கருணாஸ் நடித்துள்ளார். சுராஜ் வெஞ்சாரமூடு, தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான முதல் பார்வை வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திரையரங்கு வெளிவர உள்ளது. முதல் முயற்சியிலேயே இயக்குனரும் நடிகருமான கென், முழு படப்பிடிப்பையும் வெறும் 40 நாட்களில் முடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
இதற்கிடையில், கருணாஸும் இயக்குனராக புதிய பயணம் தொடங்க தயாராகி வருகிறார். வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றப்போவதாக அவர் முன்பே தெரிவித்துள்ளார். தந்தை இயக்குநர் உலகில் கால் பதிக்கத் தயாராகும் வேளையில், மகன் அதனை முந்தி சாதனை படைத்திருப்பது தற்போது திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது.













