நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் பொதுமக்கள் கூட்டம்; விற்பனை படுஜோர்;
நாகப்பட்டினத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள ரூ.100-க்கான “வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு” விற்பனைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வெளிப்பாளையம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, காய்கறி விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
சமையலுக்குத் தேவையான வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி, எலுமிச்சை மற்றும் தேங்காய் ஆகிய 10 அத்தியாவசியக் காய்கறிகள் வெறும் ரூ.100-க்கு வழங்கப்படுகின்றன. வெளிச்சந்தையை விட விலை மிகக் குறைவாகவும், தரமாகவும் இருப்பதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் திரண்டு வந்து ஆர்வத்துடன் காய்கறித் தொகுப்புகளை வாங்கிச் செல்கின்றனர்.
நவம்பர் 5 முதல் 7-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு மட்டுமே இத்திட்டம் செயல்பட உள்ளதால், தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு விற்பனை நிலையங்களில் காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.








