சென்னை : நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் தோட்ட இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மெயில் மூலம் வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி, மிரட்டல் வெறும் புரளி என உறுதி செய்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லம் அருகே அமைந்துள்ள ரஜினிகாந்தின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக இன்று காலை போலீசாருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் வந்தது. அதனைத் தொடர்ந்து, போலீசார் மற்றும் குண்டு நிபுணர் குழு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை நடத்தியது. நீண்ட நேரம் தேடுதல் பணிகள் நடந்தபின் எந்தவித வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படாததால், இது புரளி என தெரியவந்தது.
இதுபோலவே, திரைப்பட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் வீட்டிற்கும் மின்னஞ்சல் வழியாக குண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. அங்கு நடத்தப்பட்ட சோதனையிலும் எதுவும் சந்தேகத்திற்கிடமானது எதுவும் கிடைக்கவில்லை.
மேலும், டி.ஜி.பி அலுவலகத்திற்கும் காலை நேரத்தில் மற்றொரு மிரட்டல் மின்னஞ்சல் வந்தது. அதில், நடிகை ரம்யா கிருஷ்ணனின் அபிராமபுரம் இல்லத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பேரில், மோப்ப நாய்கள் மற்றும் குண்டு நிபுணர்கள் அங்கு சென்று பரிசோதனை செய்தனர். இதுவும் புரளி என முடிவுக்கு வந்தது.
அதேபோல், அமைச்சர் சேகர்பாபு, பாடகி சின்மயி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கிரிஜா வைத்தியநாதன், பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டி ஆகியோரின் வீடுகளுக்கும் இதேபோன்ற மிரட்டல் வந்துள்ளதாக தகவல். இதற்கு முன்னர் எஸ்.வி.சேகர், நடிகர் விஜய், த்ரிஷா, ஸ்வர்ணமால்யா உள்ளிட்ட பலரின் வீடுகளுக்கும் தொடர்ச்சியாக குண்டு மிரட்டல்கள் வந்திருந்தன.
இவை அனைத்தும் சோதனையில் புரளியாக முடிந்ததால், மின்னஞ்சல் மூலம் இம்மிரட்டல்களை விடுக்கும் மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

















