மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில், இயக்குநர் ஆறுமுககுமார் இயக்கியுள்ள “ஏஸ்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் யோகி பாபு, பப்லு, அவினாஷ், திவ்யா பிள்ளை ஆகியோரும் இணைந்துள்ளனர்.
கதை சுருக்கம் :
மலேசியாவிற்கு பழைய அடையாளங்களை மறைத்து வரும் கதாநாயகன் (விஜய் சேதுபதி), யோகி பாபுவின் உதவியால் ஒரு ஹோட்டலில் வேலை பெறுகிறார். அங்கு ருக்மிணியை சந்திக்கும் அவர், ஆரம்பத்தில் மோதலாக இருந்த அவர்களது உறவு பின்னர் காதலாக வளர்கிறது.
ருக்மிணி, தனது வீட்டை மீட்டெடுக்க போராடுவதை அறிந்த விஜய் சேதுபதி, பணத்துக்காக சூதாட்டத்தில் இறங்குகிறார். வில்லன் அவினாஷிடம் ஏமாற்றப்பட்டு கடனாளியாக மாறுகிறார். கடனை அடைக்க வேணில் செல்லும் ரூ. 40 கோடி பணத்தை கொள்ளையடிக்க அவர் முடிவெடுக்கிறார்.
இந்த கொள்ளையின் பின் என்ன நடக்கிறது ? விஜய் சேதுபதி உண்மையில் யார் ? என்ற கேள்விகளுக்குத் தான் படம் பதிலளிக்கிறது.
திரைப்பட விமர்சனம் :
விஜய் சேதுபதி தனது சாதாரண நடிப்பை மீண்டும் நிரூபித்துள்ளார். ஆனால் அவரது கதாபாத்திரம் கொஞ்சம் மேல் பட்டதாக அமைந்திருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
ருக்மிணி வசந்த் தனது அழகு, நடிப்பு இரண்டிலும் கவனம் ஈர்த்துள்ளார். யோகி பாபுவின் நகைச்சுவை பல இடங்களில் பயனளிக்காமல் போனது. இது படத்தின் மிகப்பெரிய குறையாக அமைந்துள்ளது. பப்லு, அவினாஷ், திவ்யா பிள்ளை ஆகியோரது பங்களிப்பு மனதை திருப்திப்படுத்துகிறது.
இயக்குநர் ஆறுமுககுமார் உருவாக்கிய கதைக்களம் ஆழமானதாக இருந்தாலும், திரைக்கதை மெதுவாக நகர்கிறது. குறிப்பாக முதல் பாதியில் கதை பல இடங்களில் சரிவை அடைகிறது. ஆனால் இரண்டாம் பாதியில் ஆக்ஷன் காட்சிகள், ப்ரீ கிளைமாக்ஸ் மற்றும் கிளைமாக்ஸ் நன்றாக இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் கரணின் வேலை பாராட்டத்தக்கது. காதல் காட்சிகளை அழகாக படம் பிடித்திருக்கிறார். இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் பின்புல இசையில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஜஸ்டின் பிரபாகரனின் “உருகுது உருகுது” பாடல் நன்றாக இருந்தது. எடிட்டிங்கும் படத்தின் பல இடங்களை காப்பாற்றியுள்ளது.