விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் தடையின்றி பயிர்க்கடன் வழங்க வேண்டும்! – திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்..
திருவாரூர், நவ.26 –
விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் எவ்விதத் தாமதமுமின்றி, தடையின்றி விவசாயக் கடன்களை உடனடியாக வழங்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் தலைவர்கள் மற்றும் மண்டலப் பொறுப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்டத் தலைவர் நீலன் அசோகன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்டப் பார்வையாளர் தெய்வேந்திரன் கலந்து கொண்டு, ஒவ்வொரு பூத்திற்கும் மூன்று நபர்களைத் தேர்வு செய்வது, டிசம்பர் 1-ஆம் தேதி முதல் ஒவ்வொரு மண்டலத்திலும் தெருமுனைப் பிரசாரக் கூட்டங்களை நடத்துவது மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அறிவித்துள்ள கட்சிப் பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ள ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் நியமனங்களை முழுமையாக ஏற்றுக்கொள்வது என்றும், கட்சியின் அறிவிப்புகளை ஏற்க மறுத்து போட்டிக் கூட்டங்கள் நடத்துவதுடன், சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பொதுவெளிகளில் மாநில நிர்வாகிகள், மாவட்டப் பார்வையாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களை விமர்சிப்பது கட்சியின் ஒற்றுமைக்கு எதிரானது எனக் கண்டனம் தெரிவிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் விவசாயக் கடன்களை எவ்விதத் தடையுமின்றி, காலதாமதம் செய்யாமல் உடனடியாக வழங்க கூட்டுறவு சங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இரு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் நகரச் செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.







