திருவாரூர் டீக்கடையில் வணிக சிலிண்டரில் இருந்து தண்ணீர் வெளியேறியதாகப் பரபரப்பு
சிலிண்டரில் தண்ணீரா? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ
திருவாரூரில் டீக்கடையில் பயன்படுத்தப்பட்ட வணிக சமையல் எரிவாயு சிலிண்டரில் இருந்து தண்ணீர் வெளியேறியதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் வாளவாய்க்கால் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் அடுப்பு எரியாத நிலையில், சிலிண்டரின் எடை அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த கடை ஊழியர் சிலிண்டரை அசைத்துப் பார்த்துள்ளார்.
அப்போது, சிலிண்டரைச் சோதித்துப் பார்த்தபோது அதிலிருந்து தண்ணீர் வெளியேறியது
ஏற்கெனவே சிலிண்டரில் தண்ணீர் நிரப்பப்பட்டு, அதற்கு மேலே எரிவாயு நிரப்பி விநியோகம் செய்யப்படுவதாகக் கூறப்படும் வீடியோவைப் பார்த்திருந்ததாகவும், தற்போது நடந்த சம்பவம் அதனை நினைவுபடுத்தியதாகவும் வீடியோவில் பேசுபவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ரூ.3,500-க்கும் அதிகமான விலை கொண்ட வணிக சிலிண்டரில் தண்ணீர் இருந்தால், நுகர்வோருக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சிலிண்டர்களைக் கழுவும்போது தண்ணீர் உள்ளே சென்றிருக்கலாம் என சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் விளக்கம் அளித்ததாகவும் வீடியோ எடுத்த நபர் பேசி உள்ளார்.
சிலிண்டரில் தண்ணீர் இருந்ததாகக் கூறப்படும் இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்தச் சம்பவத்தின் உண்மைத்தன்மை குறித்தும், சிலிண்டரில் தண்ணீர் இருந்ததற்கான காரணம் குறித்தும் உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
சிலிண்டரில் தண்ணீர் இருந்த இந்த சம்பவம், எரிவாயு நுகர்வோர் மத்தியில் அதிர்ச்சியையும் கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது.

















