பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணிகளை தவெக ஆட்சிக்கு வந்தவுடன் ஓஎன்ஜிசி மீண்டும் தொடங்கியுள்ளது:- குத்தாலம் ராஜகோபாலபுரத்தில் உள்ள எரிவாயு கிணற்றில் பராமரிப்புப் பணி என்ற பெயரில் ஓஎன்ஜிசி துரப்பன பணியை மேற்கொள்வதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த பின்னர் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் பேட்டி:-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா ராஜகோபாலபுரத்தில் குடியிருப்புகள் மற்றும் பள்ளிக்கு மிக அருகாமையில் உள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தின் கேயுடி-9 உள்ளிட்ட 3 பழைய எண்ணெய்-எரிவாயு கிணற்றில் பராமரிப்பு என்ற பெயரில் கடந்த மாதம்முதல் விரிவான வேலைகளை ஒஎன்ஜிசி தொடங்கியுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் ஏதேனும் கசிவு அல்லது விபத்து ஏற்பட்டால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த மாதம் 11-ஆம்தேதி பணிகளை தடுத்து நிறுத்தினர். முறையான பேச்சுவார்ததை நடத்தாமல் பணிகளை தொடரக்கூடாது என்றும், எரிவாயு கிணறு தொடர்பான அடிப்படை ஆவணங்களை தங்களுக்கு வழங்க வேண்டும் அதன் பிறகுதான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஒஎன்ஜிசி மீண்டும் பணிகளை தொடங்கியதால் கடந்த மாதம் 30-ஆம்தேதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பின்னர் இதுதொடர்பாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கூறி கூட்டம் முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஓஎன்ஜிசி நிறுவனம் அந்த இடத்தில் மீண்டும் பணிகளை தொடங்கியுள்ளது. இதற்காக ராட்சத குழாய்கள் லாரிகள் மூலம் இறக்கப்பட்டு பூமிக்குள் இறக்கும் பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பினர் புகார் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணிகளை தவெக ஆட்சிக்கு வந்தவுடன் ஓஎன்ஜிசி மீண்டும் தொடங்கியுள்ளது. மாவட்ட நிர்வாகம் இதனை கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறது. இனிமேலும் தொடர்ந்து அப்பணிகள் நடைபெற்றால் மக்களை திரட்டி நிரந்தரப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார். இதில், மதிமுக, தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட ஒருமித்த கருத்துடைய கட்சி மற்றும் இயக்கத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பேட்டி: பேராசிரியர் த.ஜெயராமன் (தலைமை ஒருங்கிணைப்பாளர், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு).

















