உயரவளர்ச்சி தடைப்பட்டோரை கடும் ஊனமுற்றோராக அறிவித்து அரசின் அனைத்து திட்டங்களிலும் முன்னுரிமை வழங்க வேண்டும்:- அரசு பேருந்துகளில் மாநிலம் முழுவதும் இலவச பயண மேற்கொள்ள அனுமதிப்பதுடன், பேருந்துகளில் படிக்கட்டுகளை தாழ்வாக அமைத்திட வேண்டும்:- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம்
உயரம் தடைப்பட்டோர் மனு அளித்து கோரிக்கை:-
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 25-ஆம் தேதி உயரம் தடைப்பட்டோர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், சங்கத்தின் மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் உயரவளர்ச்சி தடைப்பட்டோர் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், தமிழக அரசு வழங்கும் மூன்றுசக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குவதற்கான உத்தரவை உடனே அரசாணையாக வெளியிட வேண்டும், மாதாந்திர உதவி தொகையை ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும், உயர வளர்ச்சி தடைப்பட்டோரை கடும் ஊனமுற்றோராக அறிவித்து அரசின் அனைத்து திட்டங்களிலும் முன்னுரிமை வழங்க வேண்டும், கல்வி, வேலை வாய்ப்புகளில் சிறப்புத் திட்டங்களை வழங்கிட வேண்டும், உயரம் வளர்ச்சி தடைப்பட்டோருக்கான சிறப்பு வீடுகளை கட்டித் தர வேண்டும், 18 வயதுக்குகீழ் உள்ள உயரவளர்ச்சி தடைப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை வழங்கிட வேண்டும், உயர வளர்ச்சி தடைப்பட்டோரை கேலி கிண்டல் செய்வதை தடுக்க மாநில அரசின் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்திட வேண்டும், அரசு பேருந்துகள் அனைத்திலும் தாழ்வாக அமையும் வகையில் படிக்கட்டுகளை அமைத்திட வேண்டும், அரசு பேருந்துகளில் மாநிலம் முழுவதும் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

















