டாஸ்மார்க் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு குண்டர் சட்டம் பாய்ந்தது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா தென்னலக்குடி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் கடந்த 18-ந்தேதி பணம் கொடுக்காமல் மதுபானம் கேட்டு தகராறில் ஈடுபட்டதோடு அந்த மதுபான கடையின் மேற்பார்வையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கோவிந்தராஜ் மகன் இலக்கியராஜ் (வயது 38) என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். மேலும் இவர் மீது வைத்தீஸ்வரன்கோவில் போலீஸ் நிலையத்தில் போக்கிரி சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இலக்கியராஜ் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து நடந்து கொள்வதால் அவர் நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சினேகா பிரியா மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த், இலக்கியராஜை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவுபடி வைத்தீஸ்வரன்கோயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் இலக்கியராஜை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

















