மயிலாடுதுறை அருகே மின்கசிவு காரணமாக கூரை வீடு தீக்கிரை ; பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தனியார் அறக்கட்டளை சார்பில் பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் வழங்கி ஆறுதல் :-
மயிலாடுதுறை மாவட்டம் கோடங்குடி ஊராட்சி நெடுமத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராபர்ட் (55) என்பவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் கூரை வீட்டில் வசித்து வருகிறார். கூலி வேலை பார்க்கும் இவர் கடந்த வெள்ளிக்கிழமை கும்பகோணத்தில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற விசேஷ நிகழ்ச்சியில் பங்கேற்க குடும்பத்துடன் சென்றிருந்தார். அப்போது மதியம் சுமார் 1 மணி அளவில், வீட்டில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ராபர்ட்டின் கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து, அருகிலுள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டின் கூரை எரிந்து சேதமடைந்ததுடன், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது.
இந்த நிலையில், மயிலாடுதுறை ஜோதி பவுண்டேஷன் குழுமத்தினர் பாதிக்கப்பட்ட ராபர்ட் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அத்துடன், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் ரொக்க நிதியுதவியையும் ஜோதி பவுண்டேஷன் ஜோதிராஜன் வழங்கினர். மேலும் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தங்களைத் தொடர்புகொள்ளுமாறும் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் தொண்டு நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் சங்கர் மணிகண்டன் செந்தில் ஆகியோர்கள் கலந்து கொண்டு நிவாரண உதவித் தொகையை வழங்கினர்.















