16.45 லட்சம் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால் மங்கனூர் கிராம மக்கள் வேதனை..
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, கஞ்சாநகரம் ஊராட்சிக்கு உட்பட்ட மங்கனூர் கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (MGNREGS) மூலம் ரூ.16.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்டுமானப் பணிகள் முடிந்து பல மாதங்கள் கடந்தும் இதுவரை அந்தக் கட்டிடம் திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால், அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அந்த வாடகை கட்டிடத்தில் குழந்தைகளுக்கு தேவையான போதிய இடவசதி, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் குழந்தைகளும், அங்கன்வாடி பணியாளர்களும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
அங்கன்வாடி மையங்களில் மூன்று முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி, சத்துணவு, உடல்நல பராமரிப்பு உள்ளிட்ட முக்கிய சேவைகள் வழங்கப்படுகின்றன. இத்தகைய நிலையில், அனைத்து வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாதது கிராம மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர்கள் கூறுகையில், “புதிய கட்டிடம் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு தயாராக இருந்தும் திறக்கப்படாமல் இருப்பது ஏன் என்பது புரியவில்லை. குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு புதிய அங்கன்வாடி மையத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், மழைக்காலங்களில் தற்போது செயல்பட்டு வரும் வாடகை கட்டிடத்தில் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருப்பது சிரமமாக இருப்பதாகவும், புதிய கட்டிடத்தை விரைந்து திறக்க மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.















