தரங்கம்பாடி கடலில் மீன் வடிவில் மறைந்திருந்த சூரனின் மகன் இரணியாசூரனை வதம் செய்த முருகப்பெருமானுக்கு திருவிடைக்கழி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது:- ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் அமைந்துள்ளது திருவிடைக்கழி சுப்பிரமணியசுவாமி முருகன் கோயில். இக்கோயில் அறுபடை வீடுகளுக்கு இணையான தலமாகமாகவும், சோழநாட்டு திருச்செந்தூர் என்றும் போற்றப்படுகிறது. திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த பின்னர் மாயையால் தரங்கம்பாடி கடலில் மீன் வடிவில் மறைந்திருந்த சூரனின் இரண்டாவது மகனான இரணியாசூரனை வதம் செய்து சாப தோஷம் ஏற்பட திருவிடைக்கழி தலத்தில் முருகப்பெருமான் சிவனை பூஜித்து தனக்கு ஏற்பட்ட சாபதோஷம் நீங்க பெற்ற தலமாக திகழ்ந்து வருகிறது. அருணகிரிநாதரின் திருப்புகழில் போற்றிப் புகழப்பட்டுள்ள இக்கோவில் முருக பெருமானும், சிவபெருமானும் ஒன்று என்ற தத்துவத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரே திருத்தலமாகும். இங்கு சிவபெருமானும் முருகப்பெருமானும் ஒரே கருவறையில் எழுந்தருளி உள்ளதால் முருகபெருமான் சிவ சொரூபமாக காட்சி அளிக்கிறார். சிறப்புமிக்க இக்கோயிலில் வைகாசி சதய திருவிழா கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆறாம் திருநாளான நேற்று முருகப்பெருமான இரண்யாசூரணை வதம் செய்யும் புராண வரலாறு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருவிடைக்கழி கோயிலில் சுப்பிரமணியர்- தேவசேனா திருக்கல்யாண உற்சவம் இன்று நடைபெற்றது. விழாவையொட்டி சுப்பிரமணியர் தேவசேனா உற்சவமூர்த்திகள் குறாவடி மரத்தடியில் எழுந்தருள செய்யப்பட்டு, ஊஞ்சல் உற்சவம் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து ஹோமங்கள் வளர்க்கப்பட்டு மாங்கல்ய தாரணம் எனப்படும் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடந்தேறியது. பின்னர் மகாபூர்ணாகுதி செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். திருமண வைபவத்தில் கலந்து கொண்டவர்கள் சுவாமிக்கு மொய் வைத்து தரிசனம் செய்து பிரசாதம் பெற்று சென்றனர்.














