புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நேற்று நடைபெற்ற கட்சி நிகழ்வுகளில் பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் சூழல் மற்றும் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் தனது கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார். மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை குறித்துப் பேசிய அவர், அமித்ஷாவின் வருகையும் ஆலோசனைகளும் தமிழக பா.ஜ.க-விற்குப் புதிய உத்வேகத்தைத் தந்துள்ளதாகவும், இது வரவிருக்கும் காலங்களில் நிச்சயம் பெரிய மாற்றத்தையும் பலனையும் அளிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த குஷ்பு, “தற்போது தமிழகத்தின் மிகப்பெரிய நட்சத்திரமாக (Star) விஜய் விளங்குகிறார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 1992-93 காலகட்டங்களில் ரஜினிகாந்த் எத்தகைய உச்சத்தில் இருந்தாரோ, அதேபோன்ற ஒரு செல்வாக்குடன் தற்போது விஜய் இருக்கிறார். எனவே, ஒரு நடிகராக அவரைப் பார்க்கப் பெருந்திரளான மக்கள் கூட்டம் வருவது இயல்பானதுதான். ஆனால், திரையுலக நட்சத்திரங்களைப் பார்க்க வரும் கூட்டம் அப்படியே வாக்குகளாக மாறிவிடுமா என்பதை நாம் காலங்காலமாகப் பல தேர்தல்களில் பார்த்து வருகிறோம். நடிகர்களுக்கான ரசிகர் கூட்டம் வேறு, வாக்காளர்கள் வேறு” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், இளைஞர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் நம்பிக்கையைப் பெற்று அதனை வாக்குகளாக மாற்ற வேண்டுமானால் தெளிவான ‘கொள்கை’ அவசியம் என்று வலியுறுத்தினார். அந்த வலிமையான கொள்கைகளைத் தான் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மக்களிடம் கொண்டு சேர்த்து வருவதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். தேர்தல் நெருங்கும் வேளையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்னும் பல புதிய கட்சிகள் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். திரைத்துறையில் விஜய்யின் ஆளுமையை அங்கீகரிக்கும் அதே வேளையில், அரசியலில் கொள்கைக்கே முதலிடம் என்பதைச் சுட்டிக்காட்டிய குஷ்புவின் இந்த கருத்து, தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

















