வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள டித்வா புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பரவலாக மழை பெய்து வருகிறது. செம்பனார்கோவில் பகுதியில் அதிகபட்சமாக 17 சென்டிமீட்டர் மழை பெய்த நிலையில், தற்பொழுது மிதமான மழையாக மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. வேளாண் துறை கணக்கெடுப்பின்படி 8,700 ஹெக்டேர் அதாவது சுமார் 22,000 ஏக்கரில் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் வடிகால் வாய்க்கால்கள் மற்றும் ஆறுகளில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. இதன் காரணமாக தண்ணீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு மேல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருந்தால் அழுகும் ஆபத்து ஏற்படும். ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து தற்பொழுது பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தண்ணீரை வடிய வைத்து பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன் மீண்டும் பயிர் செய்ய இடு பொருட்கள் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழை பாதிப்பின் அளவை அதிகரிக்க கூடும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.















