சென்னை :
அபின் ஹரிஹரன் இயக்கத்தில் ஆதித்யா மாதவன், கௌரி கிஷன், அஞ்சு குரியன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அதர்ஸ்’ திரைப்படம் நாளை திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற்றது. அப்போது ஒரு யூட்யூபர் கேட்ட கேள்வி தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சந்திப்பில், “இந்தப் படத்தின் பாடலில் ஹீரோயினை தூக்கினீர்களே, எவ்வளவு வெயிட் இருந்தார்?” என்று கதாநாயகன் ஆதித்யா மாதவனிடம் யூட்யூபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு ஆதித்யா, “நான் நிறைய உடற்பயிற்சி செய்வதால், எனக்கு அவர் வெயிட்டாக தெரியவில்லை” என பதிலளித்தார்.
இந்த நிகழ்வு குறித்து பின்னர் நடைபெற்ற மற்றொரு பேட்டியில் கௌரி கிஷன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அவர் கூறியதாவது:
“அங்கு அந்தக் கேள்வி கேட்கப்பட்ட போது, இன்னும் இப்படிப் பேசி கேட்கிறார்களா என உறைந்துபோனேன். ஆனால் பதில் சொல்லவேண்டும் என்ற எண்ணம் வந்தது. அந்த நபர் என்னை மரியாதையின்றி நடத்தினார். நான் ஜனர்னலிசம் மாணவிதான், எனவே அந்த கேள்வி எனக்கு மிகவும் அருவருப்பாக இருந்தது.
நான் அவரிடம், ‘நீங்கள் என்னுடைய வெயிட் கேட்டீர்கள், நான் உங்கள் வெயிட் கேட்பேன் என்றால் சொல்லுவீர்களா?’ என கேட்க நினைத்தேன். இது sexualized மற்றும் body shaming கேள்வி. ஒரு நடிகையாக என்ன செய்தேன் என்பதைப் பற்றி கேட்காமல், உடல் தோற்றம் குறித்து பேசுவது தவறு. அவர் செய்தது ஒரு முட்டாள்தனமான செயல்,” எனக் கூறினார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற ‘அதர்ஸ்’ படத்தின் பத்திரிகையாளர் காட்சிக்குப் பிந்தைய சந்திப்பில், அதே பத்திரிகையாளர் “நான் என்ன தப்பாக கேட்டேன்?” என கேட்டார். இதற்கு கௌரி கிஷன்,
“அன்று நீங்கள் ஹீரோவிடம் எனது உடல் எடை குறித்து கேட்டீர்கள். அது body shaming. என்னை நடிக்க வைப்பது இயக்குநரின் தேர்வு, அதைக் கேட்க நீங்கள் யார்? இது ஒரு முட்டாள்தனமான கேள்விதான்,” எனக் கடும் பதிலளித்தார்.
“இந்தக் கேள்வியை ஒரு ஹீரோவிடம் கேட்பீர்களா? நான் இங்கு இருக்கும் ஒரே பெண். என்னை பெண் என்பதற்காக டார்கெட் செய்து கேட்கிறீர்கள். சுற்றி இத்தனை பேர் இருக்கிறார்கள், யாரும் அதற்கு எதிராகக் கேள்வி எழுப்பவில்லை,” என்று தெரிவித்தார்.
பின்னர் தன் தரப்பில் உள்ள நியாயத்தை விளக்கிய கௌரி கிஷன், சந்திப்பை முடித்துவிட்டு அமைதியாக வெளியேறினார்.
















