உறவினரால் தாக்கப்பட்டு மயிலாடுதுறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு கை, கால்களில் எலும்பு முறிவு இருந்தும் நார்மல் என டிஸ்சார்ஜ் செய்ததாக உறவினர்கள் பரபரப்பு புகார் தெரிவித்த நிலையில். இளைஞர் ஒருவரும் தனக்கு முறையாக சிகிச்சை வழங்கவில்லை என்று குற்றம்சாட்டி உயிர் போய்விட்டால் யார் பொறுப்பேற்பது என்றும் கேள்வி;-
திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி அருகேயுள்ள அசனக்குடி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மனைவி தனலெட்சுமி(30) என்பவர் இடப்பிரச்சனை முன்விரோதம் காரணமாக கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி உறவினரால் தாக்கப்பட்டு கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் செப்.1ஆம்தேதி அதிகாலையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடுமையான வலி இருந்தபோதிலும் மருத்துவர்கள் வலி அப்படித்தான் இருக்கும் எனக் கூறி செப்டம்பர் 2-ஆம் தேதி அவரை டிஸ்சார்ஜ் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் வலி தாங்க முடியாத தனலெட்சுமியை தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றுள்ளனர். அங்கு எக்ஸ்-ரே, எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்து பார்த்ததில் கால் மற்றும் கையில் எலும்பு முறிவு இருந்தது தெரிய வந்ததாகவும், அங்கு சிகிச்சை பெற்று தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வசதியில்லாததால் மீண்டும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட தனலெட்சுமி உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் தனலெட்சுமிக்கு உரிய சிகிச்சை வழங்கப்படாமல், சொந்த விருப்பத்தின் பேரில் நோயாளியை அழைத்துச் செல்கிறோம் என கட்டாயப்படுத்தி கையெழுத்து கேட்டதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கையெழுத்து போட மறுத்த நிலையில் தொடர்ந்து சிகிச்சையில் இருக்கும் தனலெட்சுமி இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட தலைமை மருத்துவரிடம் நடவடிக்கை எடுக்ககோரி புகார் மனு அளித்துள்ளார். ஏழை எளிய மக்களின் உயிரோடு விளையாடும் வகையில் செயல்படும் அரசு மருத்துவமனை நிர்வாகம் மற்றும் அலட்சியமாக நடந்துகொண்ட மருத்துவர்கள் மீது மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் உடனடியாக துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில் இந்த பிரச்சனை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இந்நிலையில் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறையில் ஏற்பட்ட மோதலில் கலைவாணன் என்பவர் படுகாயமடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனக்கு தலையில் 8 தையல்களும், காதுக்கு மேல் பகுதியில் 2 தையல்களும் என மொத்தம் 10 தையல்கள் போடப்பட்டுள்ளன. தொடர்ந்து தலை மற்றும் கன்னப் பகுதிக்கு ஸ்கேன் எடுக்கப்பட்ட நிலையில், அந்த ஸ்கேன் அறிக்கையை மருத்துவர்கள் சரிபார்க்கவோ அல்லது அதன் முடிவுகள் குறித்து விளக்கம் அளிக்கவோ இல்லை என்றும், மேலும், வலி நிவாரண மாத்திரைகளோ, உரிய சிகிச்சைகளோ அளிக்காமல் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாகக் குற்றம்சாட்டி உயிருக்குப் பாதுகாப்பற்ற முறையில் அலட்சியமாகச் செயல்பட்ட மருத்துவமனை நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட இளைஞர் கோரிக்கை விடுத்து உயிர் போய்விட்டால் யார் பொறுப்பேற்பது என்றும் கேள்வி எழுப்பி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

















