பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ வைரலாகி வருகிறது :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து, கிராம பகுதிகளான பட்டவர்த்தி, மணல்மேடு ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள், காலை மாலை இருவேளையும் அரசு பேருந்துகளை மட்டுமே நம்பியுள்ளனர். பள்ளிகளுக்கு வந்து செல்ல போதிய பேருந்து இல்லாத நிலையில், படியில் தொங்கிக்கொண்டு உயிரை கையில் பிடித்தபடி இவர்கள் பிரயாணம் செய்கின்றனர். இந்நிலையில் இன்று மணல்மேடு நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றில் பள்ளி சீருடை அணிந்து புத்தகப் பையை முதுகில் மாட்டியபடி மாணவன் ஒருவன், படியில் தொங்க இடம் இன்றி ஒற்றைக்காலில், தொங்கிக் கொண்டு வந்தான். அரசு மருத்துவமனை சாலையில் செல்லும் பொழுது தொடர்ந்து தொங்க முடியாத நிலையில் கால் இடறி, கீழே விழ நேர்ந்தது, அந்த சமயத்தில் வேகத்தடை இருந்த காரணத்தால் மாணவன் நல்வாய்ப்பாக கீழே விழாமல் தடுமாறிய நிலையில், மீண்டும் பேருந்தை தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தான். அதை சாலையில் சென்ற நபர்கள் வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த காட்சிகள் வைரலாக பரவி வருகிறது, போதிய பேருந்துகள் இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















