மாதவரம் இரட்டை ஏரி படகு குளம் மக்களுக்கு பயனின்றி கிடக்கும் அவலம்!
கோடிக்கணக்கில் வீணாகும் மக்கள் வரிப்பணம்?
கண்டுகொள்ளுமா விஜய் தலைமையிலான அரசு?
சென்னை மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புழல் இரட்டை ஏரியில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயன்பாட்டிற்காக பல கோடி ரூபாய் செலவில் படகு குளம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
ஏரி சுத்தம், படகு நிறுத்துமிடம், கடைகள் மற்றும் குழந்தைகள் விளையாட்டு பகுதி உள்ளிட்ட வசதிகள் அமைக்க திட்டமிடப்பட்ட நிலையில், பணிகள் முழுமையாக நிறைவடைவதற்கு முன்பே படகு குளம் திறந்து வைக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தற்போது படகு குளம் பயன்பாடின்றி கிடப்பதுடன், படகுகள் ஆகாயத்தாமரைகளால் சூழப்பட்டு காட்சிப் பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டம் ஏன் இதுவரை முழுமையாக நிறைவு செய்யப்படவில்லை? பணிகள் முடிவடையாத நிலையில் எந்த அடிப்படையில் படகு குளம் திறக்கப்பட்டது? என்ற கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளன.
முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதால் தற்போதைய அரசால் அலட்சியப்படுத்தப்படுகிறதா என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களும், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எல். விஜய பிரபு அவர்களும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, முடங்கிக் கிடக்கும் பணிகளை மீண்டும் தொடங்கி, இரட்டை ஏரி படகு குளத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட படகு குளம் மீண்டும் உயிர் பெறுமா?
பொறுத்திருந்து பார்ப்போம்…

















