விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு தவெக கவுன்சிலர்கள் தர்ணா- நகர மன்றம் கூட்ட அரங்கில் தமிழக முதலமைச்சர் விஜயின் படத்தை வைக்காததற்கு எதிர்ப்பு.
விழுப்புரம் அருகே வளவனூர் பேரூராட்சியில் இன்று பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்தக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான ஜோசப் விஜயின் புகைப்படம் வைக்கப்படவில்லை எனக் கூறி, தவெக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த பேரூராட்சி மன்ற கூட்டத்தின்போது, தமிழக வெற்றிக் கழக கவுன்சிலர்கள் கந்தன் மற்றும் ஹாரிஸ், பேரூராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் விஜயின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, அடுத்த கூட்டத்தில் புகைப்படம் வைக்கப்படும் என பேரூராட்சி மன்றத் தலைவர் மீனாட்சி ஜீவா உத்தரவாதம் அளித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் விஜயின் புகைப்படத்தை வைக்க அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய தவெக கவுன்சிலர்கள், இதனை கண்டித்து வளவனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், முதலமைச்சர் விஜயின் புகைப்படத்தை பேரூராட்சி அலுவலகத்தில் வைக்க அனுமதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். தங்களது கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அடுத்த கட்டமாக விழுப்புரம்–புதுச்சேரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தவெக கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.இதனால் வளவனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது














