வேளாங்கண்ணி அருகே குடியிருப்புகளை ஒட்டி ஜேசிபி மூலம் கரையைத் தோண்டி சாலை அமைக்க முயற்சி: மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு:
பேட்டி: பாதிக்கப்பட்ட பொதுமக்கள்
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகேயுள்ள பிரதாபராமபுரம் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளை ஆற்றின் தென்கரைப் பகுதியில், வீடுகளை அகற்றும் நோக்கில் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆற்றின் கரையைத் தோண்டி சாலை அமைக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்தக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர்.
பிரதாபராமபுரம் வெள்ளை ஆற்றின் தென்கரைப் பகுதியில் பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் குடியிருப்புகள் அமைத்து வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி சனிக்கிழமையன்று அப்பகுதிக்கு வந்த மற்றொரு சமூகத்தினர் சிலர், ஜேசிபி இயந்திரம் மூலம் குடியிருப்பு வீடுகளின் பின்புறப் பகுதியில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, ஆற்றின் மண் அரிப்பைத் தடுப்பதற்காகப் பல ஆண்டுகளாகப் பராமரிக்கப்பட்டு வந்த மரங்களை வேரோடு சாய்த்தும், குடியிருப்புகளின் சுவர்கள் இடிந்து விழும் அளவிற்கு ஆற்றின் கரையை ஆழமாகத் தோண்டியும் சேதப்படுத்தியுள்ளனர்.
இச்செயலை அப்பகுதி மக்கள் தட்டிக்கேட்டபோது, அரசு அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற்றுதான் ஆற்றின் கரையோரமாகச் சாலை அமைப்பதாகவும், குடியிருப்புகளைக் காலி செய்துவிட்டு வெளியேறுமாறும் அக்கும்பல் மிரட்டல் விடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய தங்களை வாழ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தும் உள்நோக்கத்துடன் இந்த அத்துமீறல் அரங்கேற்றப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ள பொதுமக்கள், ஆற்றின் கரையை உடைத்துச் சாலை அமைக்கும் பணியை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், தங்களது குடியிருப்புகளுக்கும் வாழ்வாதாரத்திற்கும் உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.













