பிரசித்தி பெற்ற எட்டுக்குடி முருகன் சித்ரா பௌர்ணமி பெருவிழா 56 மணி நேர இடைவிடாத பாலாபிஷேகம்: பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பால்காவடிகள், ரதக்காவடிகளுடன் குவியும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள முருகனின் ஆதிபடைவீடாக போற்றப்படும் எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி பெருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த 11 நாள் பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக, 56 மணி நேர இடைவிடாத பாலாபிஷேகம் நடைபெற்று வருவது பக்தர்களின் ஆன்மிக உற்சாகத்தை அதிகரித்துள்ளது. தேரோட்டத்தைத் தொடர்ந்து தொடங்கிய பாலாபிஷேகம், பௌர்ணமி தினமான இன்று இடைவிடாமல் நடந்து வருகிறது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்பக்காவடி உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.இந்த பெருவிழாவின் மற்றொரு சிறப்பாக, ரதக் காவடி எடுத்து வரும் பக்தர்களின் பக்தி வெளிப்பாடு அனைவரையும் ஈர்த்து வருகிறது. குறிப்பாக, வலிவலம் கீழத்தெரு ஸ்ரீ முருகன் அடிமை குழுவினரின் எட்டாவது ஆண்டு ரதக் காவடி ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.வலிவலம் ஸ்ரீ வெள்ளை விநாயகர் கோவிலில் இருந்து தொடங்கிய இந்த ரதக் காவடி ஊர்வலம், கொளப்பாடு, பையூர், திருக்குவளை உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று, எட்டுக்குடி முருகன் கோவிலை சென்றடைந்தது. வழியெங்கும் பக்தர்கள் மலர் தூவி வரவேற்று பக்தி உணர்வை வெளிப்படுத்தினர்.இந்த ரதக் காவடியை சுமந்த இளைஞர்கள், தாளம் மற்றும் பக்திப் பாடல்களுக்கு ஏற்ப உற்சாகமாக நடனமாடி சென்றது திருவிழாவிற்கு தனி சிறப்பை சேர்த்தது. இந்நிலையில், வரும் மே 2ஆம் தேதி இரவு 11 மணி வரை கோவில் நடை சாத்தப்படாமல், 56 மணி நேர இடைவிடாத பாலாபிஷேகம் தொடர்ந்து நடைபெறவுள்ளது.















