மயிலாடுதுறை மாவட்டம் சந்திரபாடி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோயில் உள்ளது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆண்டு தோறும் பால்குடம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு தினமாக இன்று சந்திரபாடி மீனவ கிராமத்தில் உள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் இருந்து காப்பு கட்டி விரதமிருந்து அம்மனுக்கு உகந்த மஞ்சள் உடை உடுத்திய 100 க்கனக்கான பக்தர்கள் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு பால்குடம் எடுத்தும் அலகு காவடி எடுத்தும் மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக மேலத்தெரு சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த கொண்டு வந்த பாலைக்கொண்டு சீதளாதேவி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோயிலின் முன்பு அம்மன் வேடம் அணிந்து நடைபெற்ற காளியாட்டம் பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்தியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.












