மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்க்கப்படாத நீண்ட கால பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி மாவட்ட வளர்ச்சி குழு சார்பில் உண்ணாவிரத போராட்டம்; அனைத்து கட்சியினர் சேவை சங்கத்தினர் பங்கேற்பு:- டெங்கு களப்பணியாளர்களின் சம்பளத்தை நகராட்சி நிர்வாகத்தினர் திருடியதாகவும் குற்றச்சாட்டு:-
மயிலாடுதுறை நகரில் தீர்க்கப்படாத நீண்ட கால பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி சின்னக்கடை வீதியில் மாவட்ட வளர்ச்சி குழு சார்பில் பட்டினி போராட்டம் நடைபெற்றது. பேராசிரியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மயிலாடுதுறை நகராட்சியில் 25 ஆண்டுகளாக நீடித்து வரும் பாதாள சாக்கடை திட்டத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், அதேபோல் பாதாள சாக்கடை பராமரிப்பு என்ற பெயரில் நடைபெற்ற ஊழலை விசாரணை நடத்தி வெளி கொண்டு வர வேண்டும், மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் செவிலியர்களை பணியமர்த்த வேண்டும், மயிலாடுதுறை மணக்குடியில் கட்டி முடித்து, திறக்கப்பட்ட பின்னரும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ள பேருந்து நிலையத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், புறவழிச் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் நீதி மய்யம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கட்சி பேதங்களை கடந்து கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு சேவை சங்கத்தினர் மற்றும் வர்த்தக சங்கத்தினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முரளிதரன் கூறுகையில் 25 ஆண்டுகளாக தொடரும் பாதாள சாக்கடை பிரச்சனை, மற்றும் பாதாள சாக்கடை பராமரிப்பு என்ற பெயரில் நடைபெற்ற ஊழலை விசாரணை நடத்தி வெளி கொண்டு வர வேண்டும் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் செவிலியர்களை நியமிக்க வேண்டும் புதிய பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை பிரதானப்படுத்தி இந்த பட்டினி போராட்டம் நடைபெற்று வருவதாகவும் மேலும் நகராட்சியில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வரும் டெங்கு களப்பணியாளர்கள் சம்பளத்தில் ஒரு நாளைக்கு 150 வீதம் விஞ்ஞான ரீதியாக சம்பளத்தை பிடித்தம் செய்து திருட்டு நடைபெற்றுள்ளதாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.












