மயிலாடுதுறை அருகே கொலை முயற்சி குற்றத்தில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் அய்யனார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் சக்திவேல்(வயது 19). இவர் கடந்த 22.08.2026 அன்று கீழப்பெரம்பூர் திரௌபதியம்மன் கோவில் அருகே கையில் கத்தியை வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தகவலறிந்த பெரம்பூர் போலீசார் விரைந்து சென்று சக்திவேலை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். ஏற்கனவே இவரது பெயர் பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் போக்கிரி சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சக்திவேல் பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து நடந்து கொள்வதால் அவர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சினேகாபிரியா மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த், சக்திவேலை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவுபடி பெரம்பூர் போலீசார் சக்திவேலை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில், கொலைக் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேர், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த 18 பேர், மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 9 பேர், கஞ்சா விற்பனை குற்றங்களில் ஈடுபட்ட 19 பேர், குட்கா விற்பனை குற்றங்களில் ஈடுபட்ட ஒருவர் மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 2 பேர் உட்பட மொத்தம் 54 பேர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரவுடிசத்தில் ஈடுபடுவோர், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர், கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மற்றும் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சினேகாபிரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.













