தரங்கம்பாடி அருகே உள்ள திருவிடைக்கழி சுப்பிரமணியசாமி கோவிலில் தில்லை திருக்குராவடியின் புரட்டாசி மாத 45-ஆம் ஆண்டு பாதயாத்திரை கடந்த 18-ஆம் தேதி சிதம்பரத்தில் தொடங்கியது. பாதயாத்திரையாக புறப்பட்ட பக்தர்கள் இன்று திருவிடைக்கழி கோயிலை வந்தடைந்து 25,000 மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருவிடைக்கழி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த, சோழநாட்டு திருச்செந்தூர் என போற்றப்படும் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் முருகப்பெருமானும் சிவபெருமானும் ஒரே சன்னதியில் எழுந்தருளியுள்ள சிறப்புமிக்க திருக்குராவடி வரலாற்றை கொண்டதாகவும், ஆண்டுதோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி முருகப்பெருமானை தரிசனம் செய்வதும் வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், தில்லை திருக்குராவடியின் புரட்டாசி மாத 45-ஆம் ஆண்டு பாதயாத்திரை கடந்த 18-ஆம் தேதி சிதம்பரத்தில் தொடங்கியது. பாதயாத்திரையாக புறப்பட்ட பக்தர்கள் இன்று திருவிடைக்கழி கோயிலை வந்தடைந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். மேலும், நேற்று இரவு முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், பால் காவடி, அலகு காவடி, பன்னீர் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்துக்கொண்டு பாதயாத்திரையாக கோயிலுக்கு வந்தனர். நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வழிபட்டனர். இதையொட்டி பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து திருக்குராவடி மரத்தடியில் வள்ளி, தெய்வானையுடன் உற்சவர் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வந்த பால், பன்னீர், வாழைப்பழம், கொய்யாப்பழம், திராட்சை, பாதாம், பிஸ்தா, வால்நட், தேன், சந்தனம், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு உற்சவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜை, அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களின் பக்தி பரவசத்துடன் சிறப்பு பஜனையும் நடைபெற்றது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவிடைக்கழி கோயிலுக்கு வந்து சிறப்பு தரிசனம் செய்து வழிபட்டுள்ளனர்.
விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் தில்லை திருக்குராவடி திருவிடைக்கழி பாதயாத்திரை குழுவினர் சார்பில் இந்த பாதயாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.













