மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட 10-வது வார்டில் குடிமனைப் பட்டா, சாலை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது :-
மயிலாடுதுறை நகராட்சி 10-வது வார்டு பகுதிக்குட்பட்ட பல்வேறு அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை நகரக் குழு சார்பில் கூறைநாடு பூக்கடைத் தெருவில் கண்டன சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு நகரக் குழு உறுப்பினர் தோழர் H. ஜம்ருத் பேகம் தலைமை தாங்கினார். தொடர்ந்து குடிமனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ள அனைத்துப் பயனாளிகளுக்கும் உடனடியாகப் பட்டா வழங்க வேண்டும். 10-வது வார்டில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் புதிய சாலைகளை அமைக்க வேண்டும்.ஆற்றங்கரைத் தெருவிற்குப் புதிய குழாய் வழியே குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்; குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை உடனடியாகத் தடுக்க வேண்டும். தெருக்களில் குப்பைகள் தேங்காதவாறு தினந்தோறும் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.பொதுக் குடிநீர்க் குழாய்களுக்கு ‘டேப்’ அமைத்து நீர் வீணாவதைத் தடுக்க வேண்டும்.பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் திறந்து கிடக்கும் பாதாளச் சாக்கடை மூடிகளை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும்.தெருக்களில் பொதுமக்களையும் குழந்தைகளையும் அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டக்காரர்களிடம் மயிலாடுதுறை காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக அரை மணி நேரம் மயிலாடுதுறை டு கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.













