நேபாள வெள்ளத்தில் மாயமான மயிலாடுதுறை யாத்ரீகர் ராஜேஸ்வரி குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என கூட்டமைப்பு வேதனை:-
மயிலாடுதுறை மாவட்டம், வெள்ளாலகரம் ஊராட்சி அபிராமி நகரைச் சேர்ந்த உதயகுமார் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி. இவர் கும்பகோணம் ‘சூப்பர் யாத்ரா டிராவல்ஸ்’ மூலம் ஆன்மீக சுற்றுலா சென்றிருந்த நிலையில், கடந்த 23.08.2026 அன்று ஏற்பட்ட நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ளார்.
அங்கு சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் மீட்கப்பட்டு ஊர் திரும்பிவிட்டதாகத் தகவல்கள் வரும் நிலையில், ராஜேஸ்வரியை இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் அவருடன் சென்ற மயிலாடுதுறையைச் சேர்ந்த மற்றொரு இரு யாத்ரீகர்கள் குறித்தும் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்காமல் அவர்களது குடும்பத்தினர் பெரும் துயரத்தில் உள்ளனர்.
இதுதொடர்பாக நடவடிக்கை கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என வெள்ளாலகரம் ஊராட்சி குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகளின் உண்மையான நிலையை அறிந்து மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், இதில் நிலவும் மெத்தனப்போக்கைக் கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப் போவதாகவும் அக்கூட்டமைப்பு மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளது.

















