மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை சாலைகளில் வழிந்து ஓடுவதை சரிசெய்யக் கோரி சமூக அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்:-
மயிலாடுதுறை நகராட்சிப் பகுதிகளில் பாதாள சாக்கடை பிரச்சனையால் கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதைத் தடுத்து, தொற்றுநோய் பரவாமல் உடனடியாகச் சீரமைக்கக் கோரி பெரம்பூர் பாரதி மோகன் சமூக அறக்கட்டளை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
ஆதரவற்ற மக்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக உணவு, உடைகள் மற்றும் மருத்துவ உதவிகளை தாங்கள் முன்னெடுத்து வரும் நிலையில மயிலாடுதுறை நகரில் பல இடங்களில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்தோடுகிறது. இது தொடர்பாக நகராட்சியில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நிரந்தரத் தீர்வும் எட்டப்படவில்லை. தற்போது மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், பாதாள சாக்கடை நிரம்பி வழிவதால் காலரா, மலேரியா, டெங்கு போன்ற கடுமையான தொற்றுநோய்கள் பரவும் பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தலையிட்டு, பாதாள சாக்கடை அடைப்புகளை முழுமையாக அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

















