தரங்கம்பாடி அருகே உலக புகழ்பெற்ற திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அபிராமி அம்மனின் ஆடிப்பூர மகோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது:- கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ் பெற்ற அபிராமி உடனாகிய ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சிவபெருமான் இத்தலத்தில் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி பக்தர் மார்க்கண்டேயருக்காக எமனை வதம் செய்து எமனை மீண்டும் உயிர்பித்த அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இத்தலத்தில் அபிராமி பட்டர் அவதரித்து அபிராமி அந்தாதியை இயற்றியது சிறப்பு. அபிராமி பட்டருக்காக தை அமாவாசையை அபிராமி அம்மன் பௌர்ணமி ஆக்கிய பல்வேறு புராண வரலாறுகளை உள்ளடக்கிய இவ்வாலயத்தில் அபிராமி அம்மனின் ஆடிப்பூர மகோற்ச்சவம் விழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. அபிராமி அம்பாள் சன்னதியில் உள்ள கொடிமரத்தின் முன்பு விநாயகர், அபிராமி அம்பாள், சண்டிகேஸ்வரர், சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருள செய்யப்பட்டனர். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கொடி மரத்தில் ரிஷப கொடி ஏற்றப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனை மகா தீபாராதனை நடைபெற்றது. இதில்
ஏராளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மகோற்ச்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக
தினந்தோறும் ஸ்ரீ அபிராமி அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா காட்சி நடைபெறுகிறது. 10-ம் நாள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக வருகின்ற 13-ஆம் தேதி திருத்தேர் உற்சவமும், 14ம் தேதி தீர்த்தவாரி உற்சவமும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.













