தரங்கம்பாடி அருகே விசலூர் கிராமத்தில் கதண்டு விஷ வண்டு தாக்கி 10 பேர் காயம். நான்கு பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா விசலூர் கிராமத்தில் சாலையில் சென்றவர்களை திடீரென்று கதண்டு விஷ வண்டு தாக்கியது. சாலையில் நடந்து சென்றோர் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்களை கதண்டு தாக்கியதில் 10க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் சங்கரன்பந்தலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயம் அடைந்த சங்கரன்பந்தலைச் சேர்ந்த பாலு (70), கலியமூர்த்தி (65), விசலூரை சேர்ந்த பாக்கியராஜ் (45), மற்றும் ரவீந்திரன் ஆகிய 4பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சை அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயம் அடைந்த பாலு என்பவர் கூறுகையில் சைக்கிளில் வந்த தன்னை தலையில் 50க்கும் மேற்பட்ட வண்டுகள் கடித்ததாகவும் சாலை ஓரத்தில் இருந்த பனை மரங்களில் கதண்டு வண்டுகள் 3 கூடுகள் உள்ளதாகவும், கதண்டு வண்டு கூட்டின் மீது பனம்பழம் விழுந்ததில் கூடு கீழே விழுந்தது. அதிலிருந்து பறந்து வந்த கதண்டு வண்டுகள் சாலையில் சென்றவர்களை தாக்கியதாக தெரிவித்தார். இச்சம்பவம் அறிந்த தீயணைப்புத் துறையினர் கதண்டு வண்டுகளை அழித்து கூண்டை தீயிட்டு கொளுத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இருப்பதால் பனை மரத்தில் உள்ள கதண்டு கூடுகளை இரவில் அழிக்க உள்ளதாக தெரிவித்தனர்.













