மதுரை : டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் தொடர்பான புகார்கள் குறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை கடும் கருத்து தெரிவித்துள்ளது. “மொத்த டாஸ்மாக்கிலும் ஏதோ நடக்கிறது,” என நீதிபதி புகழேந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனையாளர்களாக பணியாற்றும் மாயக்கண்ணன், முருகன் மற்றும் ராமசாமி ஆகியோர், தங்களை பணியிடை நீக்கம் செய்த டாஸ்மாக் மேலாளரின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவில், “மாமூல் வசூல் குறித்து புகார் அளித்தோம். ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததற்காகவே தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டோம். இது சட்டவிரோதம்,” என கூறப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின் போது, மதுரை மாவட்ட மேலாளர் ராஜேஸ்வரி மற்றும் திருமங்கலம் மேற்பார்வையாளர் செல்வம் ஆகியோர், தினமும் ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் ரூ.5000 வரை மாமூல் வசூலித்ததாகக் கூறப்பட்டது. இது தொடர்பான ஒலி பதிவுகள் லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
நீதிபதி, “மனுதாரர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தது டாஸ்மாக் விதிகளுக்கு முரணானதுதான். ஆனால், அதற்குக் காரணமாக உள்ள ஊழலை முதலில் கவனிக்க வேண்டும். மேலாளர் ராஜேஸ்வரி மீண்டும் பணியில் அமர்ந்திருக்கிறார் என்றால், அதிலேயே சந்தேகம் எழுகிறது,” என தெரிவித்தார்.
மேலும், “அரசு, சட்டவிரோத கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தவே மதுவை விற்பனை செய்கிறது. ஆனால் அந்த துறையிலேயே ஊழல் நடைபெறுவதால், அதன் நோக்கம் வீணாகிறது. மொத்த டாஸ்மாக்கிலும் ஏதோ நடக்கிறது என்பது உறுதியாக தெரிகிறது என நீதிபதி கூறினார்.
இதையடுத்து, மனுதாரர்களுக்கு எதிரான பணியிடை நீக்கம் உத்தரவை நீக்கி, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.