மின்சாரம் துண்டிப்பு: சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
சென்னை மாதவரம் அருகே, தொடர்ந்து மூன்று நாட்கள் மின்சாரம் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த 70-க்கும் மேற்பட்ட சிறு தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், மாதவரம் ரவுண்டானா பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடமிரும்பாக்கம் பகுதியில் ஏராளமான சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
இப்பகுதியில் முறையான சாலை வசதி மற்றும் தடையற்ற மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இதுவரை செய்து தரப்படவில்லை என தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக ஏற்கனவே அனைத்து துறை அதிகாரிகளிடமும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினரிடமும் பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், முந்தைய ஆட்சிக் காலத்திலும் இதுகுறித்து புகார்கள் அளிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால், இதுவரை தங்களது பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை என தொழில் நிறுவன உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குறிப்பாக, இப்பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும், ஒருமுறை மின்சாரம் துண்டிக்கப்பட்டால் தொடர்ந்து இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை மின்சாரம் வழங்கப்படாத நிலை ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனால் தொழிற்சாலைகளில் இயந்திரங்களை இயக்க முடியாமல் உற்பத்தி பணிகள் பாதிக்கப்படுவதுடன், தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்குக் கூட வருவாய் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
வங்கிக் கடன் உள்ளிட்டவற்றை பெற்று தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் நிலையில், தொடர் மின்வெட்டால் தங்களது தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தொழில் நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த 70-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், மாதவரம் லாரி பார்க்கிங் பகுதியில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அங்கு வந்த மின்வாரிய உதவி செயற்பொறியாளர் (AE), போராட்டத்தில் ஈடுபட்ட தொழில் நிறுவன உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, மூன்று நாட்களுக்குள் தேவையான மின்சார வசதிகளை சீரமைத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய அதிகாரி உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்தப் போராட்டத்தில் வடசென்னை சிறு தொழில் வர்த்தக சங்கத்தைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
பேட்டி:
மாலதி மதுரம்,
செயலாளர், வடசென்னை சிறு தொழில் வர்த்தக சங்கம்.

















