திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகாவில் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் மன்னார்குடி திருவாரூர் சாலையில் கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் அமைத்திட வலியுறுத்தி திருவாரூர் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் தற்போது வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த நிலையில், தமிழக அரசு புதிதாக வட்டாட்சியர் அலுவலகம் கட்டடம் கட்டுவதற்காக பொது மக்களின் எந்தவித கருத்துக்களையும் கேட்காமல் கூத்தாநல்லூர் பகுதியில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் நாகங்குடி கிராமத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு கூத்தாநல்லூர் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லை எனவும், எனவே இந்த நாகங்குடி கிராமத்தில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டும் அரசின் முடிவை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், பொதுமக்களுக்கு பலனளிக்கும் வகையில் திருவாரூர் மன்னார்குடி சாலையில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்ட வலியுறுத்தி பொதுமக்கள் பல நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காத்திருப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக மக்களுக்கு பயனளிக்காத அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பாக ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் திருவாரூர் அருகே விளமல் கல்பாலம் அருகில் தஞ்சாவூர் – திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் போராட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தை திருவாரூர் – மன்னார்குடி சாலையில் அமைத்திட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொது மக்களின் விருப்பம் மற்றும் நலனுக்கு எதிராக கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு நாகக்குடியில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்திற்கான அனுமதியை உடனடியாக ரத்து செய்திடவும், மக்களுக்கு பயனளிக்கும் வகையில் திருவாரூர்- மன்னார்குடி நெடுஞ்சாலை மார்க்கத்தில் இடத்தினை தேர்வு செய்து புதிய கட்டிடம் கட்டப்பட வேண்டும் என அரசை வலியுறுத்தி கூத்தாநல்லூர் பகுதி மக்கள் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்.















