நாகை அருகே கோவில்பத்து கிராத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அருள்மிகு எனையாளும் கண்ணபெருமாள் ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் உள்ள உயிர் மரங்கள் மற்றும் பனை மரங்களை வெட்டி விற்பனை செய்த தனிநபர் ; நடவடிக்கை எடுக்க கோரி 100 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரப்பரப்பு
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் கோவில்பத்து கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான அருள்மிகு எனையாளும் கண்ணபெருமாள் ஆலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்திற்குச் சொந்தமான இடத்தில் இருந்த உயிருடன் கூடிய மரங்கள் மற்றும் பனை மரங்களைத் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே கிராமத்தைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் வெட்டி விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து இந்து சமய அறநிலை அதிகாரிகளிடம் கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் அந்த தனி நபர்மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள், சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வெட்டப்பட்ட மரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட பேரணியாக வந்தனர். முயன்றனர்.
அவர்களை போலீசார தடுத்து நிறுத்தினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட வந்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
கோவில் நிலத்தில் உள்ள மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் அளித்துள்ள உறுதிமொழியின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.







