கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு உடனடியாக கடன் வழங்கக்கோரி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் கடனை முழுமையாக செலுத்தியும், 3 மாதங்களாக விவசாயிகளுக்கு பயிர் கடன், கரும்பு கடன் வழங்காமல் உள்ளதால் கரும்பு பயிரிடும் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
இதுகுறித்து கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் முறையிட்டும், இதுநாள் வரையிலும் விவசாயிகளுக்கு கடன் கிடைக்கவில்லை என்றும் இதுபற்றி மாநில பதிவாளர் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் எவ்வித பலனும் இல்லை கடன் கிடைக்காததால், விவசாயிகளின் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு பயிர் கடன், கரும்புக்கடன் உடனடியாக வழங்க வேண்டுமென வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த மறியல் காரணமாக விழுப்புரம் திருச்சி நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டதால்
தகவல் அறிந்தது வந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.















