சிக்கல் அருள்மிகு செல்லமுத்து மாரியம்மன் ஆலய ஆவணித் திருவிழா: 3-ம் நாள் உற்சவத்தில் யானை வாகனத்தில் அம்பாள் வீதியுலா:
நாகப்பட்டினம் மாவட்டம், உலகப் பிரசித்தி பெற்ற சிக்கல் சிங்காரவேலவர் ஆலய மேலவீதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு செல்லமுத்து மாரியம்மன் திருக்கோயிலில், ஆவணித் திருவிழா மற்றும் திருத்தேர் செடில் உற்சவம் மிக விமரிசையாக நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் 3-ம் நாளான நேற்று, காலை மஞ்சத்தில் அம்பாள் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து மதியம் மூலஸ்தான அம்மனுக்கு மஞ்சள் பொடி, திரவிய பொடி,பால், பஞ்சாமிர்தம் இளநீர் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக அருள்மிகு செல்லமுத்து மாரியம்மன் கம்பீரமான யானை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதியுலா காட்சி தந்தார். மேள தாளங்கள், நாதஸ்வர இன்னிசை முழங்க முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த வீதியுலாவில், திரளான கிராம மக்களும் பக்தகோடிகளும் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.














