பொறையார் அருகே எடுத்துக்கட்டி சாத்தனூர் கிராமத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்த கடை உரிமையாளரிடம் ரூபாய் 50,000 லஞ்சம் பெற்ற பொறையார் காவல் நிலைய தலைமை காவலரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்பி உத்தரவு:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா எடுத்துக்கட்டி சாத்தனூர் கிராமத்தில் அதே ஊரைச் சேர்ந்த விஜய மாருதி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில் கடந்த மே மாதம் பொறையார் காவல் நிலைய ஆய்வாளர் சந்தானமேரி தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டு 750 கிராம் ஹான்ஸ் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யப்படவில்லை. தொடர்ந்து சில நாட்களில் கடைக்கு வந்த உணவு பாதுகாப்புத்துறையினர் கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. கடை உரிமையாளரிடம் கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பதற்காக பொறையார் காவல் துறையினர் ரூபாய் 50,000 இலஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. எடுத்துக்கட்டி சாத்தனூரைச் சேர்ந்த வழக்கறிஞரும் நாம் மக்கள் இயக்க தலைவருமான சங்கமித்ரன் என்பவரிடம் பொறையார் போலீசாரிடம் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக விஜய மாருதியின் உறவினர் தன்னிடம் செல்போனில் பேசிய ஆடியோவை வைத்து சங்கமித்ரன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தொடர்ந்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கும் ஆன்லைனில் புகாரை அனுப்பி உள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த 31ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி உரிமையாளர் லஞ்சம் கொடுத்ததாக கூறும் ஆடியோவை சமர்ப்பித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பொறையார் காவல் நிலைய தலைமை காவலர் அன்பரசன் என்பவரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து மாவட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இடைத்தரகர் மூலம் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டதால் தலைமை காவலர் அன்பரசனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து புகார் அளித்த வழக்கறிஞர் சங்கமித்திரன் கூறுகையில் தவெக ஆட்சியில் ஊழல் செய்பவர்களை தொட்டால் விடமாட்டேன் தொட்டவர்களையும் விடமாட்டேன் என்று முதலமைச்சர் விஜய் கூறும் நிலையில் காவல்துறையினர், உணவு பாதுகாப்புதுறையினர் லஞ்சம் வாங்குவதாகவும் உரிய விசாரணை செய்து லஞ்சம் வாங்கும் உயர்அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் மீண்டும் மறு விசாரணை செய்ய புகார் அளிப்போம் என்றார்.
பேட்டி: சங்கமித்திரன் வழக்கறிஞர்

















