எப்.க்யூ.எல் நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் தங்கள் பணத்தை மீட்டு தரும்படி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்து கோரிக்கை விடுத்தனர்:-
எப்.க்யூ.எல். எக்ஸ்சேஞ் என்ற பெயரில் செல்போன் செயலியில் பணம் செலுத்தி விளையாடினால் பல லட்சம் சம்பாதிக்கலாம் என்றும், குறைந்தபட்சம் ரூ.54 ஆயிரம் செலுத்தினால் ஒருநாளைக்கு இவ்வளவு தொகை கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தைகூறி மதுரை கட்டையம்பட்டியை சேர்ந்த ரஞ்சித், அருண் ஆகியோர் தெரிவித்ததோடு இடைத்தரகர்கள் மூலம் பல பேரை இணைத்துள்ளனர். அந்த வகையில் மயிலாடுதுறை அருகே அப்பங்குளத்தை சேர்ந்த ஏஜென்ட் பேபி மற்றும் மதுரை கட்டையம்பட்டியை சேர்ந்த செல்வா, அருண் ஆகியோர் மூலம் அப்பங்குளம் கிராமத்தில் உள்ளவர்கள் இணைந்துள்ளனர். ஒவ்வொருவரும் புதிதாக 5 நபர்களை சேர்த்தால் தான் ஓரே வாரத்தில் ரூ.15,000 பணம் கிடைக்கும் என்று மூளைச்சலவை செய்ததால் 150-க்கு மேற்பட்டவர்கள் ரூ.54,000, ரூ.1 லட்சம் பணத்தை ஆப்பில் டெபாசிட் செய்து இணைந்துள்ளனர். அமேரிக்கா டாலர் 500-ம், 3 சிக்னலுக்கு 4500 ருபாய் மதிப்பில் டாலர் சேர்ந்துள்ளது.. டாலர் மதிப்பில் பணம் வருவதுபோன்று குறுஞ்செய்திகளையும் செல்போனுக்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில் எஃப்.கியூ.எல். எக்ஸ்சேஞ் மோசடி செய்துள்ளது ஏமாற வேண்டாம் என்று விளம்பரம் வந்த நிலையில் ஏஜென்ட் அப்பங்குளம் பேபியிடம் கேட்டபோது செலுத்திய பணத்தில் பாதி தருகிறோம் என்று கூறியதால் பணம் கட்டியவர்கள் அவர்கள் மூலம் அறிமுகமானவர்களுக்கு இடையே திரும்ப பணத்தை கேட்டு பிரச்சனை எழுந்துள்ளது. இதனையடுத்து கடந்த மாதம் மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் எஃப்.கியூ.எல்லில் பணத்தை செலுத்தி ஏமாந்த அப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் பணத்தை மீட்டுத்தர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மனு அளித்தனர். தொடர்ந்து இந்த பிரச்சனையில் ஏஜென்ட் பேபி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்க கூட்டத்தில் தங்கள் பணத்தை மீட்டு தரும்படி ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.













