சட்டமன்ற நிகழ்வுகளை மக்கள் நேரலையில் பார்த்து முகம் சுளிக்கிறார்கள்; மேட்டூர் அணை திறப்பது குறித்து அரசு யோசித்து முடிவு செய்ய வேண்டும் – நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முத்தரசன் பேட்டி
பேட்டி: முத்தரசன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர்.
டெல்டா பகுதிகளை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்கள் முற்றுகை போராட்டத்தில் இன்று கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. வேளாங்கண்ணி பேராலய திருவிழா நடைபெற்று வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் போராட்டத்தில் பள்ளி வைக்க கேட்டுக் கொண்டதின் பேரில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் இன்று கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முத்தரசன்…
ஜூன் 12 ல் மேட்டூர் அணை திறக்கப்படாதது, தற்போது மழையின்மை ஆகியவற்றால் டெல்டா மாவட்டங்கள் கடுமையான வறட்சிக்கு உள்ளாகி உள்ளன. குருவை சாகுபடி செய்ய முடியாமலும், செய்து பாதிப்படைந்த நிலையில், சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகி உளளது. இதன் காரணமாக டெல்டா பகுதிகளை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது. நாகை மாவட்டத்தை பொருத்தவரை அருகில் உள்ள வேளாங்கண்ணி பேராலய திருவிழா தொடங்க உள்ள நிலையில் அங்கு வரும் பக்தர்கள் நலன் கருதி முற்றுகைப் போராட்டத்தை தள்ளி வைக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் பொதுமக்கள் குறிப்பாக வேளாங்கண்ணி பக்தர்கள் நலன் கருதி முற்றுகை போராட்டத்தை தள்ளி வைத்துள்ளோம்.
சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் எது, எதைப்பற்றியோ விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். பாரம்பரியமான தமிழக சட்டமன்றத்தில் நடப்பவற்றை மக்கள் நேரலையில் பார்த்துவிட்டு முகம் சுளிக்கிறார்கள். தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை தலை விரித்து ஆடுகிறது. குருவை சாகுபடி இல்லாமல் போனது. சம்பா சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது. கடுமையான வறட்சி பாதித்த மாவட்டங்களாக டெல்டா மாவட்டங்கள் உள்ளது. இதைப் பற்றி எல்லாம் விவாதிக்காமல் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி, சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த வறட்சி பாதிப்பு குறித்து ஒரு சிறப்பு விவாதம் நடத்தி தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அதில் டெல்டா பகுதியை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். குருவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30,000 வழங்க வேண்டும். மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். தற்போது ஊராட்சியில் 10 பேர் 15 பேர்களுக்கு மட்டுமே தற்போது வேலை வழங்கப்பட்டு வருகிறது. அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். அரசு அறிவித்தபடி 345 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும். குருவை சாகுபடி இல்லாத காரணத்தினால் பாதிப்படைந்த விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் காப்பீடு திட்டம் தனியாரிடம் விடப்பட்டு இருப்பதால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை அதனால் பயிர் காப்பீடு திட்டத்தை அரசாங்கமே ஏற்று நடத்த வேண்டும். குருவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீட்டு நிறுவனம் சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை நாடாளுமன்ற உறுப்பினர் வை செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுவாக அளித்துள்ளோம். இதனை அரசுக்கு அனுப்பி வலியுறுத்துவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த கோரிக்கை மனு மீது அரசு எடுக்கும் நடவடிக்கையை பொறுத்து அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும்.
கர்நாடக அரசை பொருத்தவரை அது ஒரு ஜனநாயக அரசாக இல்லாமல் மூர்க்கத்தனமான அரசாக இருக்கிறது. யார் சொன்னாலும் காவிரியில் தண்ணீர் திறக்க மாட்டோம், அணைகள் நிரம்பினால் மட்டுமே தமிழகத்தை வடிகாலாக பயன்படுத்துவோம் என்று கர்நாடகம் பிடிவாதமாக உள்ளது. அதனால் அங்கிருந்து தண்ணீரை பெறுவதற்குரிய உத்தரவாதத்தை பெற்றுக்கொண்டு அதன் பின்னர் மேட்டூர் அணை திறப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். தற்போதைய சூழலில் அணை திறக்கப்பட்டு சம்பா சாகுபடி தொடங்கிய பிறகு தண்ணீர் இல்லாமல் அணை மூடப்பட்டால் மிகக் கடுமையான பாதிப்பு ஏற்படும். எனவே அரசு இந்த விஷயத்தில் யோசித்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
















