சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் – கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு..
காவிரி விஷயத்தில் ஒன்றிய அரசு பார்வையாளராக இருக்க கூடாது. ஒன்றிய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் பெரும் பொறுப்பு இருக்கிறது என திருவாரூரில் சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி…
திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். குறுவை சாகுபடி செய்யாத விவசாயிகளுக்கு இழப்பீடாக ஏக்கர் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டும், குறுவை சாகுபடி செய்யாததால் வேலைவாய்ப்பு இழந்துள்ள விவசாய தொழிலாளர்களுக்கு அவர்களின் குடும்பத்திற்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும், கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும், தேர்தல் வாக்குறுதி படி பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி முன்னேறிய கம்யூனிஸ்ட் கட்சியினர் தடுப்புகளை கீழே தள்ளிக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே செல்ல முயன்றனர். இவர்களை காவல்துறையினர் தடுத்தனர். அப்போது காவலர்களுக்கும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
இதனைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை சமாதானப்படுத்திய நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் ஆகியோருடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரனை சந்தித்து மனு அளித்தார்.
மனுவை பெற்றுக் கொண்ட திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் இது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்வதாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறும் போது…
காவிரி பிரச்சனை இந்தியாவின் ஒற்றுமை ஒருமைப்பாட்டை சம்பந்தப்பட்டது. எனவே கூடுதல் பொறுப்பு கர்நாடக அரசுக்கு உள்ளது. தற்போது ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். அதன்படி பிரச்சனை தீரும் என எதிர்பார்க்கிறோம். பிரச்சனை தீரவில்லை என்றால் டெல்டா மாவட்ட முழுவதும் போராட்டங்கள் தீவிரமடையும் என எச்சரிக்கை விடுத்தார்.
விவசாயிகள் தங்களுக்காக உற்பத்தி செய்யவில்லை, சமூகத்துக்காக உற்பத்தி செய்கிறார்கள். எனவே எல்லா வகையிலும் விவசாயிகளுக்கு உதவி அளிக்க வேண்டியது அரசின் கடமை. தமிழக வெற்றிக்கழக அரசு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும்.
ஒன்றிய அரசு உரிய நிதியை தமிழகத்திற்கு தர வேண்டும் தமிழக அரசும் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்ற வேண்டும். அதில் நாங்கள் மிக உறுதியாக உள்ளோம்.
காவிரி மேலாண்மை ஆணையம் சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும். ஆணையம், நீதிமன்ற தீர்ப்பு ஆகியவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும். எங்கே யார் பாதிக்கப்படுகிறார்களோ அவர்களுக்கு அருகே தான் நீதிமன்றமும், ஆணையமும் சட்டமும் இருக்க வேண்டும்.
காவிரி விஷயத்தில் ஒன்றிய அரசு பார்வையாளராக இருக்க கூடாது. ஒன்றிய அரசு பார்வையாளர் மாடத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. ஒன்றிய அரசுக்கு பெறும் பொறுப்பு இருக்கிறது. கர்நாடக அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். தமிழகம் எப்போதுமே நீர் பிடிப்பு மாநிலம் அல்ல. நீருக்கு ஏங்கும் மாநிலம். எனவே நம் பக்கம் எப்போதும் நியாயம் இருக்கும். கூடுதல் பொறுப்பு கர்நாடக அரசுக்கு தான் இருக்கிறது.
ஆளுநரிடமிருந்து தமிழகத்தை காப்பதற்காக வெளியில் இருந்து விஜய் அரசுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். அமைச்சரவையில் சேரவில்லை. கூட்டணியில் இடம் பெறவில்லை. வெளியில் இருந்து தான் ஆதரவு தெரிவிக்கிறோம். நல்லாட்சி தொடர்ந்தால் நாங்கள் ஆதரிப்போம் இல்லை என்றால் எதிர்த்து போராடுவோம் என்றார்.

















