விஜய்யின் நடிப்பில் எச். வினோத் இயக்கி உருவாகும் ‘ஜனநாயகன்’ படம், தளபதியின் இறுதி திரைப்படம் என்பதால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, ப்ரியாமணி, பிரகாஷ் ராஜ், பாபி டியோல், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பொங்கல் சிறப்பாக ஜனவரி 9 அன்று படத்தை வெளியிடுவதற்கான தயார் பணிகள் நடைபெற்று வருகின்றன.
படம் வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், புரமோஷன் நடவடிக்கைகள் வேகமெடுத்து வருகின்றன. குடியரசு தினத்தை முன்னிட்டு தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டர்கள் வெளியாகின. பின்னர் விஜய் பிறந்தநாள் ஜூன் 22-ஐ முன்னிட்டு க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. நவம்பர் 8 அன்று ‘தளபதி கச்சேரி’ என்கிற முதல் சிங்கிளும் வெளிவந்தது.
இதையடுத்து, ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27-ம் தேதி மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள Bukit Jalil ஸ்டேடியத்தில் நடைபெறும் என அண்மையில் படக்குழு உறுதிப்படுத்தியது. நிகழ்ச்சி ஏற்பாடுகள் அங்கிருந்தே தொடங்கியுள்ளன.
சாதாரண ஆடியோ லான்சாக இல்லாமல், இதை பெரிய அளவிலான கச்சேரி நிகழ்வாக மாற்றியிருக்கிறது படக்குழு. ‘தளபதி திருவிழா’ என்ற பெயரில், விஜய் நடித்த படங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட ஹிட் பாடல்களை பல பிரபல பாடகர்கள் மேடையில் பாட உள்ளனர். சைந்தவி, திப்பு, ஆண்ட்ரியா, அனுராதா ஸ்ரீராம், சரண், ஹரிசரண், ஹரீஷ் ராகவேந்திரா, யோகி பி, விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கச்சேரியில் ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய பாடல்களையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளனர். எனவே இது வெறும் இசை வெளியீட்டு விழாவாக அல்லாமல், தளபதி ரசிகர்களுக்கான ஒரு பிரம்மாண்ட இசை கொண்டாட்டமாகவும் அமைகிறது.
நிகழ்ச்சியை பார்க்க Ticket 2 U தளத்தில் நவம்பர் 28-ம் தேதி முதல் கட்டணத்துடன் டிக்கெட்டுகள் விற்கப்பட உள்ளன.
















