கரூர் கூட்ட நெரிசல் வழக்கைச் சுற்றி விசாரணை வேகமெடுத்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சென்னை பனையூர் அலுவலகத்துக்கு சிபிஐ அதிகாரி ஒருவர் வருகை தந்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. அப்போது கட்சித் தலைவர் விஜய் உரையாற்றிய நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்துக்கான காரணங்களை அறிய, முதலில் மாநில அரசு ஒரே நபர் கமிஷனை அமைத்தது. இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவும் (SIT) அமைக்கப்பட்டது. ஆனால், அந்த குழுவை எதிர்த்து தவெகவினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றி, அதன் விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையிட வேண்டும் என உத்தரவிட்டது.
அதன்படி, சிபிஐ ஏஎஸ்பி மகேஷ் குமார், எஸ்பி பிரவீன் குமார், டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழு, கடந்த 31ஆம் தேதி கரூரில் நேரில் ஆய்வு செய்தது. விஜய் பேசிய பிரச்சார மேடை, சாலை அகலம், சுற்றியுள்ள கடைத்தெருக்கள் உள்ளிட்ட இடங்களை முழுமையாக பதிவு செய்து, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் சேகரித்தனர்.
இந்நிலையில், சிபிஐ அதிகாரி ஒருவர் இன்று காலை சென்னை பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்துக்கு வந்துள்ளார். அவர், விஜய் பயன்படுத்திய பிரச்சார வாகனத்தை ஆய்வு செய்து, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான ஆவணங்களையும் கேட்டுக்கொண்டு வருகிறார்.
சிபிஐ அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் தவெக அலுவலகம் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது. விஜய்யிடம் நேரடியாக விசாரணை நடத்தப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.















