சீர்காழியில், ஐடிஐ படித்து வரும் கல்லூரி மாணவர் மீது, விசாரணை என்ற பெயரில் போலீசார் தாக்குதல், காயமடைந்த மாணவர் அரசு மருத்துவமனையில் அனுமதி, நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழகனி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. மாணவன் ஐ டி ஐ யில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி இரவு சீர்காழியில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு சென்று விட்டு நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்துள்ளனர். அப்போது போலீசார் வரவே, இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வருவதற்காக வழக்கு பதிவு செய்வார்கள் என்ற பயத்தில், இரு சக்கர வாகனத்தை கீழே விட்டுவிட்டு, ஓடி உள்ளனர். மாணவர் மட்டும் அங்கேயே நின்றுள்ளார், அங்கு வந்த காவல்துறையினர் சிறுவனை பிடித்து லத்தி மற்றும் பூட்ஸ் காலால் கடுமையாக தாக்கியதாக சிறுவனின் சகோதரி தெரிவிக்கின்றார். மேலும் நகை திருட்டு ஒன்றை ஒப்புக்கொள்ள சொல்லி வீடியோ பதிவு செய்துள்ளனர், அவர் 17 வயது சிறுவன் என்று விசாரணையில் தெரிந்ததுடன் அவரை வீட்டிற்கு அனுப்பிய காவல்துறையினர் நடந்ததை வெளியே சொன்னால், பொய் வழக்கு போடுவதாக மிரட்டி உள்ளதாகவும் சிறுவனின் சகோதரி தெரிவிக்கின்றார். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி சிறுவனுக்கு தலைவலியும் மயக்கம் ஏற்பட்டுள்ளது மேலும் தலையில் வீக்கம் ஏற்பட்டுள்ளது, சிறுவனின் சகோதரி மற்றும் உறவினர்கள் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிறுவனை சேர்த்த நிலையில் அங்கு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து சிறுவனின் உறவினர்கள் சிறார் உதவி மையத்தில் முறையீடு செய்துள்ள நிலையில், சிறுவனின் சகோதரி அஞ்சலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நேரில் புகார் மனு அளித்தார். காவல்துறையினர் தொடர்ந்து தங்கள் வீட்டிற்கு வந்து மிரட்டல் விடுத்து வருவதாக அப்போது அவர் தெரிவித்துள்ளார்.















