தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் காஜல் அகர்வால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னையில் நடைபெற்ற நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்றார். அப்போது தமிழ் சினிமா மற்றும் நடிகர் விஜய் குறித்து அவர் பகிர்ந்த கருத்துகள் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன.
பாலிவுட்டில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்த காஜல், சமீபத்தில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்திருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கான காட்சிகள் குறைவாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ‘இந்தியன் 3’ படத்தில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், தெலுங்கு படமான ‘கண்ணப்பா’வில் அம்மன் பார்வதியாக காஜல் நடித்தது பெரும் வரவேற்பைப் பெற்றது. 2020-ல் தொழிலதிபர் கௌதம் கிச்சுலுவை திருமணம் செய்துகொண்ட அவர், 2022-ல் மகனுக்கு தாயானார். திருமணத்திற்குப் பிறகு குடும்பப் பொறுப்புகளால் சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகியிருந்தாலும், தற்போது மீண்டும் சில திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.
சமீபத்தில், “காஜல் அகர்வால் விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் உள்ளார்” என்ற வதந்தி இணையத்தில் பரவியது. அதை மறுத்த காஜல், “அது முற்றிலும் தவறான தகவல்” எனத் தெளிவுபடுத்தினார்.
நகைக்கடை திறப்பு விழாவில் ஊடகங்களிடம் பேசிய அவர், “எனது அடுத்த தமிழ்ப் படம் குறித்து விரைவில் அறிவிப்பு வரும். பாலிவுட் மற்றும் தமிழ் சினிமா இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. வதந்திகளுக்கு நான் எந்த முக்கியத்துவமும் கொடுக்க மாட்டேன். விஜய்யை ஒரு நடிகராக மிகவும் விரும்புகிறேன்; அவருடன் பல படங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. ஆனால், அவரின் அரசியல் குறித்து கருத்து சொல்ல முடியாது,” என்று தெரிவித்தார்.
காஜல் அகர்வால், நடிகர் விஜயுடன் ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’, மற்றும் ‘மெர்சல்’ ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
















