சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இன்று நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது.
நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த ஜூன் 23-ஆம் தேதி, நடிகர் கிருஷ்ணா ஜூன் 26-ஆம் தேதி சென்னை போலீசால் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, ஜாமீன் கோரி அவர்கள் தாக்கல் செய்த மனுக்களை, சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் முந்தைய விசாரணையில் நிராகரித்தது.
இந்த நிலையில், இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இது, நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது,
ஸ்ரீகாந்த் தரப்பு : அவரை கைது செய்யபட்டது, இந்த வழக்கில் முக்கிய சந்தேகநபராக உள்ள பிரதீப் குமார் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே என்றும், ஸ்ரீகாந்திடம் இருந்து எந்தவிதமான போதைப்பொருளும் கைப்பற்றப்படவில்லை என்றும் வாதிடப்பட்டது.
கிருஷ்ணா தரப்பு : அவரை கைது செய்வதற்கான எந்தவிதமான தெளிவான காரணமும் தெரிவிக்கப்படவில்லை என்றும், மருத்துவ பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது நிரூபிக்கப்படவில்லை என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது.
மாற்றாக, காவல்துறை தரப்பில், சந்தேகநபர் பிரசாத் மற்றும் பிரவீன் குமார் ஆகியோரின் ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையில் நடிகர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
அனைத்து தரப்புகளின் வாதங்களையும் கவனித்த நீதிபதி, ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்க உத்தரவிட்டார். அதன்படி, இருவரும் தலா ரூ.10,000 ஜாமீனும், அதே தொகைக்கான இருவர் நபர் ஜாமீனும் வழங்க வேண்டும். மேலும், இருவரும் அடுத்த உத்தரவு வரும் வரை, தினமும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.















