சீர்காழி நகராட்சி பள்ளி வளாகத்தின் அருகே பல மாதங்களாக அகற்றப்படாத குப்பைகளில் மழைநீர் தேங்கி, டெங்கு கொசு உற்பத்தியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சீர்காழி வடக்கு மடவிளாகத்தில் நகராட்சி மேல்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. போதிய இடவசதி, காற்றோட்டம் இல்லாத கட்டத்தில் இந்த பள்ளி செயல்படுகிறது. இங்கு சுமார் 340 மாணவ}மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளி அருகிலேயே அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புக்கும் பள்ளிக்கு இடையேயான பகுதியில் அதிகளவு குப்பைகள், நெகிழிக்கழிவுகள் கொட்டப்பட்டு, பல மாதங்களாக அகற்றப்படாமல் உள்ளன.
இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழையால், இந்த குப்பைகளில் உள்ள தேங்காய் சிரட்டைகள், தேநீர் குவளைகளில் மழைநீர் தேங்கி அதிகளவு கொசு புழுக்கள் உருவாகியுள்ளன. இவற்றின் அருகிலேயே வகுப்பறைகள் அனைத்தும் உள்ளநிலையில் டெங்கு போன்ற பெரும் பாதிப்பு மாணவ}மாணவியருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் குடியிருப்பு கழிவுநீர் குழாய்கள் பழுதடைந்து பள்ளி சுற்றுசுவர் ஒரம் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், சுகாதாரசீர்கேடு, துர்நாற்றம் சூழலில் மாணவர்கள் கல்வி பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்விக் குழு உறுப்பினரும், பெற்றோருமான வைத்தியநாதன் கூறியது:
இந்த பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாமல், மரத்தடியில் அமர்ந்து மாணவர்கள் கற்கும் நிலை உள்ளது. தற்போது, பள்ளி அருகே குப்பைகள் தேங்கியுள்ளதால், கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி, மாணவ}மாணவிகளுக்கு டெங்கு போன்ற தொற்று பாதிக்கும் என்ற அச்சம் உள்ளதால், உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றார்

















