மயிலாடுதுறையில் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் திட்டத்தின்கீழ் அலிம்கோ நிறுவனத்தின் வாயிலாக 847 மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு ரூ.1.34 கோடி மதிப்பீட்டிலான உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில், பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர சைக்கிள் கிடைக்கவில்லை என்று கண்ணீர்விட்ட மாற்றுத்திறனாளிக்கு அதே இடத்தில் ரூ.60,000 மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர சைக்கிளை வழங்கி மாவட்ட ஆட்சியர் ஶ்ரீகாந்த், எம்பி சுதா நடவடிக்கை:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் திட்டத்தின் கீழ் அலிம்கோ நிறுவனத்தின் வாயிலாக 847 மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு ரூ.1.34 கோடி மதிப்பீட்டிலான உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை எம்.பி.சுதா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து தலைமை உரையாற்றினார். மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜமால் முகமது யூனூஸ், நிவேதாமுருகன், செந்தில்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், பேட்டரியால் இயங்கும் மூன்றுசக்கர சைக்கிள்கள், மின்சாரத்தால் இயங்கும் சக்கர நாற்காலிகள், கை மற்றும் மோட்டார் மூலம் இயங்கும் வண்டிகள், வாக்கர்ஸ், ஊன்றுகோல்கள், செயற்கை கால்கள் மற்றும் கைகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இதில் தரங்கம்பாடி பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் தனக்கு பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர சைக்கிள் வழங்க கோரிக்கை விடுத்த நிலையில் ஊன்றுகோல் வழங்க உள்ளதாக தெரிவித்து கண்ணீர்விட்டு அழுதார். உடனடியாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் ஆனந்தராஜ் மனுவினை பரிசீலித்து, அவருக்கு உடனடித் தீர்வாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ரூ.60,000 மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர சைக்கிளை மாவட்ட ஆட்சியர் ஶ்ரீகாந்த், எம்பி சுதா ஆகியோர் வழங்கினர். இதுபோன்று குறைகளை தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாற்றுத்திறனாநிகளின் தேவைகள் நிறைவேற்றித்தரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
















