மயிலாடுதுறை அருகே இருசக்கர வாகனத்தில் பை-பாஸ் சாலையில் சென்ற இளம்பெண் உள்ளிட்ட இருவரை வழிமறித்து வழிப்பறி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல்:- 4 பேரை கைது செய்து பெரம்பூர் போலீஸார் விசாரணை:-
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தத்தங்குடி ஊராட்சியில் புதிதாக பை-பாஸ் சாலை அமைக்கப்பட்டு, கடந்த ஒரு வருடமாக புழக்கத்தில் இருந்து வருகிறது. மயிலாடுதுறையில் இருந்து தத்தங்குடி செல்லாமல் நேரடியாக திருவாரூர் செல்பவர்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். வாகன போக்குவரத்து மட்டுமே அதிகமுள்ள இந்த சாலையில், இன்று காலை 5.30 மணியளவில், மயிலாடுதுறையில் இருந்து 25 வயது இளைஞர் ஒருவர் தனது பெண் தோழியை அழைத்துக்கொண்டு திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் கிராமத்தை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, தத்தங்குடி பள்ளன் வாய்க்கால் என்ற இடத்தில் நின்றிருந்த சுமார் 10 பேர் கொண்ட கும்பல் இருசக்கரவாகனத்தை மறித்து அவர்களிடம் தகராறில் ஈடுபட்டதோடு, அந்த பெண் அணிந்திருந்த வெள்ளிக் கொலுசு, தங்கத் தோடு மற்றும் இருவரின் செல்போன் ஆகியவற்றை கத்தியை காட்டி மிரட்டி பறித்துக் கொண்டு, அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, அங்கிருந்து தப்பிய இருவரும் சம்பவம் குறித்து பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் 4 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடைய மற்ற இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
நேற்றிரவு, அதேபகுதியில் இளைஞர்கள் பலர் நண்பரின் பிறந்த நாள் விழாவை கொண்டாடிவிட்டு, கடைவீதியில் அட்ராசிட்டியில் ஈடுபட்டுள்ளனர். போலீஸார் அப்போதே ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியிருந்தால் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றிருக்காது என குற்றஞ்சாட்டியுள்ள அப்பகுதி மக்கள் பை-பாஸ் பகுதியில் போலீஸார் தொடர் ரோந்தில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.














